நீண்ட நாட்களாகவே எழுதவேண்டும் என்று நினைத்து கொண்டிருந்த பதிவு. இன்று தான் தொடங்க முடிந்தது..
இது பொன்னியின் செல்வன் விமர்சனம் குறித்த பதிவு அல்ல... அதை விமர்சனம்
செய்யும் தகுதியும் எனக்கு இல்லை.. என்னை பாதித்த அந்த கதையின்
கதைமாந்தர்களை பற்றிய எனது கருத்துக்களே இந்த பதிவின் நோக்கம்..
![]() |
| கல்கியின் பொன்னியின் செல்வன் அட்டை படம் |
ஏனோ சிறுவயதில் பொன்னியின் செல்வன் புத்தகத்தை பார்த்தாலே எனக்கு தலை வலி தான் வந்தது. அதற்கு காரணம் அந்த புத்தகத்தின் 5 பாகங்களாக கூட இருக்கலாம்..எனவே பள்ளி பருவத்தில் அந்த புத்தகத்தை அப்படியே ஓரம் கட்டி விட்டேன்...
கல்லூரி மூன்றாம் ஆண்டு படிக்கும் போது பலர் பொன்னியின் செல்வனை மிக அதிகமாக புகழ்வதை கேட்டேன்.அப்படி என்னதான் அந்த புத்தகத்தில் இருக்கிறது என்று விருப்பமே இல்லாமல் படிக்க தொடங்கிய புத்தகம் தான் பொன்னியின் செல்வன்.
ஆனால் சில அத்தியாயங்கள் படிக்க ஆரம்பித்ததுமே பொன்னியின் செல்வன் என்னை முழுவதுமாக சோழ தேசத்துக்கே அழைத்துச்சென்று விட்டது. அதை படித்து முடிக்கும் வரை நானும் சோழ நாட்டில் ஒரு மனிதனாகவே வாழ்ந்து வந்தேன். என்னுடைய இரவு, பகல்,பசி, தூக்கம் அனைத்தையும் பொன்னியின் செல்வன் மறக்கடித்து விட்டது.
வந்தியத்தேவன்:
வந்தியதேவனின் பயணங்களாக நூல் பயணித்திருக்கிறது. நானும் வந்தியத்தேவனோடு சேர்ந்து நாடு நகரமெல்லாம் சுற்றி திரிந்தேன்.. அவனுடன் பயணிக்கும் ஒவ்வொரு நிமிடமும் மனதில் ஒரு குதூகலம். அவன் சுழலில் மாட்டிய பொழுது எனக்கும் அவனோடு சேர்ந்து மூச்சு முட்டியது. அவன் ஒவ்வொரு பிரச்சனைகளில் மாட்டிகொண்டு தப்பிக்கும் காட்சிகள் என் கண் முன்னே கலையாத கனவுகளாய் நிலைத்து உள்ளது.
![]() |
| அருள்மொழி வந்தியதேவனை புயலில் காப்பாற்றும் காட்சி |
குந்தவையின் காதலனாக, அருள்மொழியின் தோழனாக நெஞ்சில் நிறைகிறான். ஆதித்த கரிகாலன் இறந்ததும் அவனை தோளில் தூக்கி கொண்டு ஓடும் காட்சியில் என்னை அறியாமல் கண்ணீர் கசிந்தது. இறுதியில் மணிமேகலையை நினைத்து உருகுமிடம் நீங்காத பாரமாய் இன்னும் என் மனதில்...
ஆழ்வார்கடியான்:
![]() |
| வந்தியத்தேவன் மற்றும் ஆழ்வார்க்கடியான் |
ஆழ்வார்கடியான் என்ன ஒரு பாத்திர படைப்பு. நினைக்கும் போதே மலைப்பு ஏற்படுகிறது.வந்தியதேவனுக்கு அவன் உதவி செய்யும் போதெல்லாம் நானும் அவனுக்கு நன்றி கடன் பட்டுள்ளதாகவே நினைத்து கொள்கிறேன். அவனுடைய குறும்புத்தனம், நந்தினி மேல் கொண்ட பாசம், மிகசிறந்த ஒற்றறியும் திறன் அவை தான் என்னை அவனுக்கு ரசிகனாக மாற்றியது. பெருமாள் மேல் அவன் கொண்ட பக்தி, அனைத்து சிவனடியார்களையும் தான் ஒருவனாய் சமாளிக்கும் போது அவர்களை அடிக்க தடியை தூக்கும் போதும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறான். பொன்னியின் செல்வனில் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் ஆழ்வார்கடியான்.
குந்தவை:
![]() |
| குந்தவை |
குந்தவை பற்றி யோசிக்கும் போதெல்லாம் இப்படி பட்ட பெண்கள் சோழ தேசத்தில் வாழ்ந்தார்கள் என எண்ணி ஒரு தமிழனாய் நான் பெருமை கொள்கிறேன். அவள் வந்தியத்தேவன் மேல் கொண்ட காதல் ஒரு கவிதையை ஒத்தது. "நீ இல்லாமல் நான் இல்லை" போன்று எந்த வசனத்தை சொல்லியும் அவர்கள் தங்கள் காதலை வளர்க்க வில்லை.ஆனாலும் அவர்கள் காதலை கல்கி உணர வைத்தார். ஒரு நாட்டையே நிர்வகிக்கும் திறமை அவளிடம் உள்ளது, அவள் வானதி மேல் கொண்ட நட்பு ஆழமானது. ஈடு இனையற்ற தமிழ் பெண் குந்தவை..
- தொடரும்





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக