ஞாயிறு, 25 ஜனவரி, 2015

சங்கதாரா



                 பொன்னியின் செல்வன் படித்த அனைவருக்கும் பொதுவாக தோன்றும் ஒரே கேள்வி ஆதித்த கரிகாலனை கொன்றது யார் என்பது தான். எனக்கு அதில் ஆர்வம் சற்று அதிகமாகவே காணப்பட்டது. அதற்கான தேடுதல் வேட்டையாக கூகிளில் நுழைந்த பிறகு எனக்கு அறிமுகமான புத்தகம் தான்  சங்கதாரா.


ஆதித்த கரிகாலன் :

                 நான் பொன்னியின் செல்வன் பதிவில் சொன்னது போல் அவனது வீரம் எப்பொழுதுமே என்னை மெய் சிலிர்க்க வைப்பதாகவே இருந்தது. அவனது கதாபாத்திரம் குறித்து ஏதோ ஒரு எதிர்பார்ப்புடனேயே தான் பொன்னியின் செல்வனை படித்து வந்தேன். ஆனால் அவன் கொலையுண்ட தருணம் மிக பெரும் ஏமாற்றம் எனக்குள் ஏற்பட்டது. அந்த மாபெரும் வீரன் கொல்லப்பட்டதை என்னால் ஏனோ ஏற்றுகொள்ள முடியவில்லை. நாவலாக படித்த எனக்கே இப்படி என்றால் அவனது கொலை சோழ நாட்டிற்கு எத்தகைய இழப்பாக இருந்திருக்கும் என்பதை என்னால் உணர முடிகிறது.
  
சங்கதாரா :
            


           நாவல் ராஜேந்திர சோழன் ஆட்சி காலத்தில் தொடங்குகிறது. மரண படுக்கையில் இருந்த தன் அத்தை தவமணி அடிகளார் எழுதி கொடுத்த ஓலை ஒன்று அவர் இறந்த பிறகு அவனுக்கு கிடைக்கிறது. அதை முதலில் படித்த ராஜேந்திர சோழனின் மகள் அருண்மொழி நங்கை தன் தந்தையிடம் இந்த ஓலையை எரித்து விடுங்கள் என்று கூறுகிறாள். அதிர்ச்சியடைந்த ராஜேந்திர சோழன் அப்படி என்ன இந்த ஓலையில் இருந்தது என்று மகளிடம் கேட்க. இது சோழ தேசத்தின் அழிவுக்கு கட்டியம் கூறுவதாக உள்ளது எனவே இதை தாங்கள் தெரிந்து கொள்ளவேண்டாம் என்று கூறுகிறாள். கோபமுற்ற ராஜேந்திரன் ஓலையை படிக்க சொல்லி கட்டளை இடுகிறார். அவளும் வேறு வழியின்றி ஓலையை படிக்க தொடங்குகிறாள்.

             சோழ தேசத்தையே அழிக்கும் அளவுக்கு அப்படி அந்த ஓலையில் என்னதான் இருந்தது என்று தெரிந்து கொள்ள நானும் ராஜேந்திர சோழனோடு ஆர்வம் கொண்டு நாவலை படிக்க தொடங்கினேன். இப்படி முதல் அத்தியாயத்திலேயே தொடங்கிய விறுவிறுப்பு கடைசி வரை குறையாமல் கொண்டு சென்று பல்வேறு அதிர்சிகளை கொடுத்து நாவலை முடித்திருக்கிறார் ஆசிரியர் “ காலச்சக்கரம் நரசிம்மா “. இப்படியும் நடந்திருக்க முடியுமா. அப்படி நடந்திருந்தால் அந்த சூழ்நிலை எப்படியெல்லாம் இருந்திருக்கும் என்று நினைத்து படித்தால் இது ஒரு திரில்லர் கதை போலத்தான் இருக்கும்.

            குந்தவையும், பெரிய பழுவேட்டரையரும் நாவலின் இரு தூண்கள் என்று சொல்லலாம். கல்கியின் கதாபாத்திரங்களுக்கும் இதில் வரும் கதாபாத்திரங்களுக்கும் குணத்தில் வேறுபாடுகள் இருந்தாலும் அதை கதையின் போக்கில் சரியெனவே நமக்கு தோன்றும்படி வெற்றிகரமாக நாவலை எழுதி இருக்கிறார் ஆசிரியர். நாவல் முழுவதும் ஏகப்பட்ட முடிச்சுகள். ஆனால் அத்தனை முடிச்சுகளையும் கடைசி இரு அத்தியாயங்களில் அவிழ்க்கும் போது இந்த சங்கதாரா நாவல் ஆச்சர்யமளிக்கும் விருந்தாக அமையும்

               மிகவும் எளிமையான எழுத்து நடையில் இன்றைய தலைமுறையினருக்கு புரியும் படி எழுதபட்டுள்ள விறுவிறுப்பான நாவல் சங்கதாரா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக