அப்பத்தா இன்னும் எவ்வளோ நேரம் ஆகும் சொல்லுபத்தா. டேய் ராசையா கொஞ்ச நேரம் தொனதொனங்காம இருக்கியா அஞ்சு மணி வண்டி வார நேரந்தான் இந்தா இப்ப வந்துரும் இரு. போபுத்தா அப்பவே புடுச்சு நீ இப்புடி தான் சொல்லிட்டு இருக்க இன்னுங் காணும். அந்தா வந்துருச்சு ராசா எந்திரி என்று தன் மடியில் இருந்த பேரனை தூக்கி நிறுத்தினாள் அரசி
. ஒரு பெரிய யானையை போல ஆடியபடியே வந்து நின்றது அந்த பேருந்து. ஏப்பா டிக்கெட் குடுக்குற தம்பி இந்த புள்ளைய புடிப்ப்பான்னு சொல்லிட்டு தட்டு தடுமாறி ஏரிய அரசி பேரன ஜன்னல் பக்கம் விட்டுட்டு அவளும் உஸ்ஸுனு உக்காந்தா.
"பாட்டி எங்க போனும்"
"பனையூருக்கு ஒரு டிக்கெட்டுபா"
"ஒன்னா? அப்ப ஒம் பேரனுக்கு "
"அவனுக்கு இன்னு மூணு வயசே
முடியலப்பா "
" அய்யே அப்பத்தா எனக்கு அஞ்சு வயசு, அன்னைக்கி தானே அம்மா சொல்லுச்சு " "கண்ணு தானே தெரியலனு சொன்ன காதும் கேக்கலையா அப்பா கிட்ட சொல்லி ஆஸ்பத்திரிக்கி போப்புத்தா "
முடியலப்பா "
" அய்யே அப்பத்தா எனக்கு அஞ்சு வயசு, அன்னைக்கி தானே அம்மா சொல்லுச்சு " "கண்ணு தானே தெரியலனு சொன்ன காதும் கேக்கலையா அப்பா கிட்ட சொல்லி ஆஸ்பத்திரிக்கி போப்புத்தா "
" ஏ பாட்டி உன் பேரன் விட்டா ஊரையே வித்துருவான் போல , ரெண்டு டிக்கெட்டுக்கு எட்டு ரூவாய எடு"
முகத்தை சுருக்கி கொண்டே எட்டு ரூபாய வெத்தல பையிலருந்து எடுத்து குடுத்தா.
கண்டக்டர் அடித்த விசிலில் பேருந்து பனையூர் பஸ் ஸ்டாப் என்ற ஆலமரத்தடியில் நின்றது.
பேரன ஒரு கையில புடிச்சுகிட்டு எறங்கி நடக்க ஆரம்பிச்சா அரசி.
போற வழியில பொட்டிகடைய பார்த்தான் ராசையா
" அப்பத்தா எனக்கு அம்பயாசு தரியா"
போற வழியில பொட்டிகடைய பார்த்தான் ராசையா
" அப்பத்தா எனக்கு அம்பயாசு தரியா"
"எதுக்குடா காசு ஒனக்கு ?"
" காலைல மணி பய எனக்கு குடுக்காம கல்கோனா தின்னுகிட்டே நக்கலிச்சானா எனக்கு அழுகையா வந்துருச்சு அதுக்கு தான் கல்கோனா வாங்கிகிறேன் குடு."
"ஒங்கய்யன் என்கிட்ட கோடிய கொட்டி வச்சுட்டு போன மாரி என்கிட்ட வந்து கேளு, இந்தா புடி, பொட்டிகட அத்தாச்சி இந்த பயலுக்கு ரெண்டு கல்கோனா குடுங்க"
"இந்தாங்க ஆயா காசு"
"காச ஒம் அப்பாத்தாள்டயே குடுடா, அப்புடியே என் அண்ணேன் தான் உனக்கு பேரனா வந்துருக்காருத்தாச்சி "
"ஏத்தாச்சி ஒம் பேரன எங்க கூட்டிட்டு போய்து வார.?"
"அது ஒன்னுமில்லத்தாச்சி சின்ன மக ரெத்தினத்த பாக்கதான், போன மாசமே வந்துட்டுபோன்னு சொன்னா. நாமளுக்கு தான் கொல்லையில கடலைக்கி மயிலு வெரட்டவே நேரமில்லையே. போன வாரம் தான் கடல ஆஞ்சுட்டு காலைல தான் எம் மயனும் மருமாளும் ஆலங்குடி ஏத்திட்டு போயிருக்காக. இன்னைக்கி வீட்டுல சும்மா தானே இருக்கோம்னு இந்தா இவனயும் கூட்டிட்டு போயி பாத்துட்டு வந்தேன்."
" என்ன சொல்றாரு ஒம் புது மாப்புள"
" புது மாப்புள ம்ம்ம் ஓசி சோறு திங்க ஒம்போது மயிலு பஸ்ஸு ஏறி வந்துருக்காளா கெளவினு என் காது பட அவன் ஆத்தாள்ட கேட்டான் "
" ஒன் நாத்தனாரு மயனா என்ன அத்தாச்சி இப்புடி சொல்ற உன் மவள சீரு செனத்தி எதுவும் வேணாம்னு கட்டிகிட்டு போன தங்கமான புள்ளனு ஊரு முழுசும் ஒரே பாட்டா இருக்கு நீ என்னடானா இப்புடி சொல்லிட்ட "
உடனே தேம்ப தொடங்கிவிட்டாள் அரசி
" என் வீட்டுல நடக்குறது அவங்கெளுக்கு எப்ப்டி தெரியும், உம் புருசனும் எம் புருசனும் பழகுன பழக்கத்த வச்சு ஓங்கிட்ட மட்டுந்தாத்தாச்சி சொல்றேன். மாமேன் மகளுக்கு என்னமோ வாழ்க்க குடுக்கிறாப்ள ஒன்னும் வேனானு சொல்லிட்டு இப்பல்லோ அவன் புத்திய காட்டுறான், போன மாசமே தாலிய வித்துட்டு பத்தாயிரம் குடுத்து விட்டேன், அந்த நன்றி கூட இல்லாத வெறும்பய இன்னைக்கி நாக்க புடிங்கிட்டு சாகுற மாரி சொல்லிபுட்டான். அவன் சொன்ன சொல்லுக்கு அங்கனயே தொங்கிரலானு வந்துச்சு. பொண்ணு வாக்கபட்ட எடம்னு அழுகைய அடக்கிட்டு வந்துட்டேன் " ன்னு முந்தானையில கண்ண தொடச்சா.
" அட நீ அழுவாத விடுத்தாச்சி நாளக்கி அவன் புள்ளைய கட்டி குடுத்துட்டு சீர் பட்டு வந்தா தெரியும் "
"அப்புடிலாம் சொல்லாததாச்சி எம்புள்ள போன எடம் நல்லாருக்கனும்"
"காசு எதுவும் கேட்டா ஒம் மயன்கிட்ட சொல்லி வாங்கி குடுக்க வேண்டியதானே"
"அவன் இந்த ரெண்டு பொம்பள புள்ளகள கட்டி குடுக்க பட்ட பாடு இருக்கே. அதுக்கு வாங்குன கடன கட்டமுடியாம கெடந்து ராப்பகலா அல்லாடுறான். ராத்திரி பாம்பு செத்தைக்கி நடுவால அந்த கொல்லயில கொசு கடியில கெடந்து சாகுறான். இதையும் சொல்லி இன்னும் ஏன் அவன கஸ்டபடுத்துறோனு தான் தாலிய வித்தேன். இத்தன வயசு வரயெல்லாம் இருக்க கூடாதுத்தாச்சி. இருந்தா இப்படித்தான் கெடந்து சீப்படனும். அவரு இருந்துருந்தா கண்ட நாயெல்லாம் என்ன இப்படி பேசிபுட்டு திமிரா அவரு முன்னாடி திரிய முடியுமா. இந்த பேரப்பய மட்டும் இல்லன்னா அவரு போனப்பவே நானும் போயிருப்பேன். அப்பத்தா அப்பத்தானு கொடங்கைகுள்ளயே கெடக்குறான். விட்டுட்டு ஒரு நிமிசம் அங்கிட்டு இங்கிட்டு போ விடுறதில்ல, அவன் ஆத்தா அப்பண்ட்ட கூட போறதில்ல. இவன்தேன் உசுருனுட்டு கெடக்குறேன்"
"ம்க்கும் இவனும் இன்னும் கொஞ்ச நாளைக்கி தான் அத்தாச்சி அப்பறம் பத்து வயசானதும் அவன் அம்மா பின்னாடி போவான் இருவது வயசானதும் அவம் பொண்டாட்டி பின்னாடி போவான். அப்ப நாம இருக்கமோ இல்லையோ இருந்தா யாரு இந்த கெளவினு கேப்பான் " ணு யோசிக்காம சொல்லி முடிச்சுட்டா.
சுறுக்குனு மனசுல ஏதோ குத்துன மாரி இருந்துச்சு அரசிக்கு.
என்ன தோனுச்சோ மனசுல, தெரியல ராசையாவ கூட்டிகிட்டு சரி வரத்தாச்சி போயி வெளக்க ஏத்துறேனுட்டு போய்ட்டா.
வீட்டு கதவ தொறந்து சிமிலிய பத்தவச்சவ காலைல வடிச்ச சோத்த ராசையாக்கு ஊட்டிவிட்டு தூங்க சொன்னா.
"கூத அடிக்கிது அப்பத்தா"
"இரு துப்பட்டிய எடுத்துட்டு வரேன்"
"உன்னூட்டு சீலைய எடுத்து குடு துப்பட்டில ஒம்புட்டு வாசனையே வரல"
கேட்டதும் கண்ணு கலங்கித்தான் போய்ட்டா அரசி. சீலைய எடுத்து வந்து போத்தி விட்டா.
"நீயும் படுத்துக்க அப்பத்தா"
வரேன் ராசா நீ தூங்குனு சொல்லிட்டு வீட்டு கதவ சாத்திட்டு சிமிலிய அணைக்க போனவ கண்ணுல மாலையோட சுவத்துல கெடந்த வீட்டுகாரர் படம் பட்டுச்சு. கொஞ்ச நேரம் அதையே வெறிச்சு பாத்துக்கிட்டே இருந்தவ என்னென்னவெல்லாம் நெனச்சு பாத்தாலோ தெரியாது அப்படியே தரைல உக்காந்து தேம்ப ஆரம்பிச்சா. அந்த வீட்டுக்குள்ளயிருந்து பேரன் காதுக்கு கேக்ககூடாதுனு மெல்லிய சத்ததுல வந்த அழுகுரல் ஊரை சூழ்ந்திருந்த அமைதியையும் கலங்கடித்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக